Wednesday, February 27, 2013

திரு.வி.க. திருநூறு



திரு.வி.க. திருநூறு

01. ஆரூர் தமிழ்த்தென்றல் ; ஆக்கத் தமிழருவி;
நேரார், திரு.வி.க. நேற்று.

02. நேற்றென்ன, இன்று நிகரார், திரு.வி.க
ஆற்றல் உரைஞர், அறை?.

03. அறைந்தார் ; கனித்தமிழில் ஆர்த்தார் ; பணியால்
நிறைந்தார் ; தொழிலாளர் நெஞ்சு.

04. நெஞ்சுரத்தர் ; செம்மாந்த நேயர் ; திரு.வி.க.
விஞ்சுவினைக் குண்டோ, விலை?

05. விலையில் விடுதலைப்போர் வேங்கை, பெரியார்
உலையில் வடித்த உளி.

06. உளிபோல் பகைக்கல் உடைத்த உழைப்பர் ;
எளிமைத்  திரு. வி.க. ஏறு.

07. ஏறாய் முழங்கி, ஈடில் பொதுவுரிமைப்
பேறாய் விளைந்ததவர் பேச்சு.

08. பேச்சும் செயலும் பிறழ்வுற்ற பேடிமைத்
தீச்செயல் இல்லாத் திரு.

09. திரு.வி.க. கொள்கைத் திறமாறா வாழ்க்கை
உருவக மானார், உயர்ந்து.

10. உயர்தாழ் உலகியல் ஓராத் தொழிலர்
துயர்தீர் திரு.வி.க.  தொண்டு.

11. தொண்டுக் கனிமலிந்த தோப்பு, திரு.வி.க.
முண்டித் தமிழ்வளர்த்த மூப்பு.

12. மூப்பும் இளமை முரண்முடுக்கும் ஒன்றிணைந்த
வார்ப்பே திரு.வி.க. வாழ்வு.

13. வாழ்நாளைக் கொள்கை வரலாறாய் மாற்றிய
தாழ்வாரா அண்ணலவர் தாம்.

14. தாமே எனப்பிதற்றித் தண்டமிழைத் தாழ்த்திவிடும்
தீமேல் இவராரார் தேடு.

15. தேடிப் புகழ்பரவித் தேற்றமுறா மெய்த்துறவி
ஈடிப் புலவர்க்கார் எண்.

16. எண்ணமெலாம் மாந்தநலம் எஞ்ஞான்றும் எவ்விடத்தும்
பெண்ணருமை பேசலவர் பீடு.

17. பீடார் திரு.வி.க. பேச்சும் செயலும்
வாடா மலர்க்கா மணப்பு.

18. மணக்கும் தமிழில் மடைவெள்ளம் போன்றே
இணக்குமே அய்யா எழுத்து.

19. எழுத்தும் பொழிவும் எழிலார் தமிழை
வழுத்தும் வளமார் வடிப்பு.

20. வடிவில் தொழிலாளர் வாட்டம் அகற்றும்
படிநற் படியமைத்தார் பார்.

21. பார்போற்றும் நந்தமிழப் பண்பாட்டுப் பெண்பாலர்
சீர்போற்றி வாழ்ந்தார் சிறந்து.

22. சிறந்த தொழிற்கழகச் செம்மல் ; பிறரை
மறந்தும் இகழாமை மாண்பு.

23. மாண்பார் முதுக்குறைஞர் மாசில் திரு.வி.க.
பூண்டார் பொதுநலப் பொற்பு.

24. பொற்பார் திரு.வி.க. பொய்யாத் தமிழ்நடையைக்
கற்பார் வியப்பர் களித்து.

25. களிதரு கட்டுரைஞர் ; கற்கண்டுப் பாட்டர் ;
எளிமை திரு.வி.க. ஏர்.

26. ஏருழவர் போலுழைத் தெஞ்ஞான்றும் மாந்தநலப்
பேருவகை எய்தலவர் பேறு.

27. பேறாய் பிறங்கிப் பெருந்தமிழம் பேணிய
ஏறார் திரு.வி.க. ஏத்து.

28. ஏத்தும் துறவுமன ஏந்தல் திரு.வி.க.
மூத்தநற் கொள்கை முரசு.

29. முரசொலி போற்பொழிந்த மொய்ம்பர் ; இவரின்
அரசியலும் ஆப்பாகும் ஆங்கு.

30. ஆங்கில ஆட்சிக் கடிவருடா மண்மானப்
பாங்கினை நாடறியப் பாடு.

31. பாட்டுத் தமிழ்போல் பணைத்த அடிமைமனப்
பூட்டைத் திறந்தார் பொழிந்து.

32. பொழிலார் தமிழீழம் போந்து தமிழர்
அழியா வழியுரைத்தார் ஆய்ந்து.

33. ஆய்ந்த பெரும்புலமை அய்யா திரு.வி.க.
வாய்ந்த தமிழ வளம்.

34. வளவேர்க் கிளைக்கும் வழுவில் தமிழின்
களமார் தலைமகன் காண்.

35. காணாப் பொதுவுடைமை கைகூட வித்திட்ட
வாணாள் தொழிற்கழகர் வாழ்த்து.

36. வாழ்நிலத்தைக் காந்தியார் மீட்க ஆரூரார்
தாழ்வின்றி முன்வந்தார் தான்.

37. தான்பட்ட துன்பத்தால் தாய்நாடர் மீட்சியுறத்
தேன்சிட்டாய்த் தொண்டுசெய்தார் தேர்ந்து.

38. தேர்ந்த திலகர் திரு.வி.க. முன்னோடி
ஓர்ந்தே யுரைத்தேன், உவந்து.

39. உவந்து குலவால் ஒழித்தார், திரு.வி.க.
நிவந்தார், பெரியார்போல் நீடு.

40. நீடுதுயில் நீக்கி நிலைநிறுத்த பாவேந்தர்
பாடுபொருள் போலுமிவர் பண்பு.

41. பண்பட்ட சொல்லின் பயன்தெளித்த அய்யாவின்
கண்பட்ட கல்லும் கனி.

42. கனித்தமிழால் மக்கள் கவர்திறலர் ; என்றும்
தனித்தமிழ்போல் வாழ்ந்தார் தழைத்து.

43. தழைத்த தமிழ்த்தென்றல் தந்த தடத்தில்
உழைத்தால் உயரலாம், ஒப்பு.

44. ஒப்பாம் இருபாலில் ஒன்றேபெண் ; தாழ்வென்ன?
எப்போதும் சொன்னார், எடுத்து.

45. எடுத்த பணியில் இளையா துஞற்றிக்
கொடுத்தார், பயன்மாலை கோத்து.

46. கோக்கஞ்சாக் காழுள்ளம் ; கோள்வழுவா மெய்வாழ்க்கை ;
காக்கும் திரு.வி.க. கை.

47. கைந்நூல் உடுக்கையும் கையா நடக்கையும்
மைந்தார் மணவழகர் மாண்பு.

48. மாண்ட பழந்தமிழ மாந்தம் திரு.வி.க
பூண்ட நெறியயன்று போற்று.

49. போற்றி மொழிவளர்த்த பொய்யாப் புலத் தென்றல்
ஆற்றல் பொதுளியர் ஆம்.

50. ஆவன ஊக்கி, அழிவன நீக்கிய
தூவலே அய்யா துணை.

51. துணைக்கண்டம் போற்றும் தொழிற்கழக முன்னர்
இணையில் திரு.வி.க. ஏறு.

52. ஏற்றமிக்க செந்தமிழின் ஈர்க்கும் எதுகைநடை
ஆற்றல் மணவழகர் ஆறு.

53. ஆற்றோட்டச் சொற்பொழிவால் ஆங்கில ஆட்சியரைத்
தோற்றோடச் செய்தமிழத் தூண்.

54. தூண்டா விளக்காய்த் துலங்கியமா முனிவர்;
ஈண்டார் தமிழ்த்தென்றல் ஈடு?

55. ஈட்டம் இவறி இனம்விற்ற மூடரெல்லாம்
ஓட்டம் பிடித்தார், உணர்ந்து.

56. உணரார் பகைப்பை ஒதுக்கித் தமிழத்
துணராய் மலர்ந்ததவர் தொண்டு.

57. தொண்டுகிழம் நொண்டிமுடம் துள்ளியயழச் செய்ததவர்
மண்டுதமிழ் மேடை மழை.

58. மழைமண் ணுறவாய் மணவழகர் மக்கள்
விழைதலைவர் ஆனார், விளைந்து.

59. விளைத்தது நாட்டு வெளியேற்றம், அக்கால்
களைத்ததோ, ஆரூர்க் களிறு.

60. களியார், கதழார், களையார், பகைமுன்
நெளியார், பெரியார் நிகர்.

61. நிகரில் குறள்போல் நிவந்த தமிழ
மகவில் ஒளிர்ந்த மணி.

62. மணித்தமிழ்ச் சொற்பொழிவால் மன்பதை ஈர்த்துப்
பிணித்த திரு.வி.க.நம் பேறு.

63. பேறுகால நோவஞ்சாப் பெண்ணின் பெருமையை
வேறியார் யாத்தார், விளம்பு?

64. விளம்பரப் போலி விளைச்சல் தலைமைக்
களங்கமிலார் யாருண்டு, காட்டு?

65. காட்டுமலர்க் காட்சி, கலியாண சுந்தரர்நாள்
ஏட்டுக் கருத்தென் றியம்பு.

66. இயம்பி முரற்றி எதிரர் வியக்க
நயம்படச் சொன்னதவர் நா.

67. நாவரசர் நல்லுரை நடையர் அருள்வேட்டல்
பாவரசர் என்பர் பயின்று.

68. பயின்றவர் எல்லாம் பயன்மிகக் கொள்ளும்
வியன்றமிழ் நாட்டு விளக்கு.

69. விளக்கி விரித்துரைத்து வேற்றவரின் ஆற்றல்
பிளக்கும் திரு.வி.க. பேச்சு.

70. பேச்சும் எழுத்தும் பிழையாச் செயல்களும்
மூச்சாம் மணவழகர் மொய்ம்பு.

71. மொய்ம்பார் முதுமக்கள் முன்னேற்றம் எண்ணியயண்ணி
ஐம்பால் தமிழ்வளர்த்தார் ஆய்ந்து.

72. ஆய்வறிவில் லாரின் அழுக்காற் றுரைமறுப்பில்
பாய்புலி யானர் பணைத்து.

73. பணைத்தமிழப் பண்பாட்டைப் பண்டுபோல் பேணி
இணையறச் செய்தார், இசைந்து.

74. இசைத்தமிழ் ஈர்ப்பாம் இவருரை மடுத்தார்
விசைத்தெழச் செய்யும் விரைந்து.

75. விரைத் தமிழ்த் தென்றல் விளங்கெழில் வாழ்க்கை
உரைத்தெளி வாகும் உணர்.

76. உணர்த்திப் பகைவர் உளங்கொளச் செய்த
இணரூழ்  உரைக்குண்டோ, ஈடு.

77. ஈடில் தமிழீழ ஈகப்  புலிபோலத்
தேடில் திரு.வி.க.வே தீர்வு.

78. தீர்மானம் செய்துதிரிக் காமல் செயற்படுத்தும்
சேர்மானம் அய்யா சிறப்பு.

79. சிறந்தவர் ; கொள்கை செழித்தவர் ; இன்பம்
துறந்தவர் ; பண்பாட்டுத் தூண்.

80. தூண்டா மணிச்சுடர் ; தோன்றாப் பெருந்தலைவர்
பூண்டார் தமிழறப்  பூண்.

81. பூண்டமிழ்த்  தேசபக்தன் பொன்னார் நவசக்தி
மாண்பினுக் குண்டோ, மறுப்பு?

82. மறுப்பார் தெளிந்து மகிழ, மணவழகர்
நிறுப்பார் எழுத்தால் நிமிர்ந்து.

83. நிமிர்நடை வேழம் நெடுநோக் கரிமா
திமிரில்  திரு.வி.க தேர்.

84. தேர்ப்புகழ் ஆரூர் திரு.வி.க. போலியர்போல்
ஆர்ப்புரை யாளர் அலர்.

85. அலர்முக அண்ணல் ; அன்பருள் நெஞ்சர் ;
பலர்புகழ் பண்புப் பழம்.

86. பழந்தமிழ்ச் சால்பர் ; பகைவரையும் ஈர்க்கும்
குழந்தை மனத்தரெனக் கொள்.

87. கொள்ளுவ கொண்டு, குறைகாணின் அஞ்சாமல்
தள்ளும் இயல்பு தனி.

88. தனித்த பெரியார்போல் தன்கொள்கை வாழ்ந்தே
இனித்தவர் யாருண் டியம்பு?

89. இயம்பிப் பொதுநலம் எண்ணி யுழைத்து
நயம்பட வாழ்ந்தார் நலிந்து.

90. நலிந்தும் நொடிதோறும் நாட்டுக் குழைத்துப்
பொலிந்தார் திரு.வி.க. போற்று.

91. போற்றுவார் இல்லாப் பொதுநலத் தொண்டினால்
மாற்றினார் கல்லார் மனம்.

92. மனத்தூய்மை மாந்தநேயம் மாறாத் தமிழ
இனத்தூய்மை தென்றல் எழில்.

93. எழிலார் திரு.வி.க. என்றும் தமிழத்தேன்
பொழிலாய் மணந்தார் பூத்து.

94. பூச்சொரிவாய்ச் சொற்பொழிவைப் பொய்யாப் புலிக்குருளைப்
பாய்ச்சலெனச் செய்ததவர் பாங்கு.

95. பாங்கறியார் செய்தவற்றால் பாழ்பட்ட செந்தமிழப்
பூங்கா திருத்தினார் போந்து.

96. போந்தார் தமிழ்க்கடலுள் பொன்றார் வறுமையினால்
ஈந்தார் இனியவுயிர் ஏன்?

97. ஏனென்று கேட்பார்யார்? ஈடில் திரு.வி.க
தேனென்று கொள்வார்யார்? தேடு.

98. தேடறிய தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.
பீடறியான், செய்வான், பிழை.

99. பிழையாக் கலியாணர் பெண்ணின் பெருமை
மழையாம் மகளிர்க்கு மாடு.

100. மாடாய் உழைத்து மடிந்த திரு.வி.க
நாடா மடத்தமிழ் நாடு.